Holy Cross Shrine Manapad's Official Website

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday 13 April 2020

ஆலயம் அறிவோம்: "தூய லூர்து அன்னை திருத்தலம், வில்லியனூர்"

வேண்டும் வரங்களை தருகின்ற "தூய லூர்து அன்னை திருத்தலம், வில்லியனூர்" குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம்.


🌲🌺🌲🌺🌲🌺🌲🌺🌲🌺🌲🌺🌲🌺🌲🌺

🍇பெயர் : தூய லூர்து அன்னை திருத்தலம்
🍇இடம் : வில்லியனூர், பாண்டிச்சேரி

🌷மறை மாவட்டம் : புதுவை - கடலூர் உயர் மறை மாவட்டம்
🌷மறை வட்டம் : புதுவை.

🌳நிலை : திருத்தலம்
🍀கிளைப்பங்குகள் :
🌹1. அருட்சகோதரிகள் இல்லம், அரியூர்
🌹2. திருஇருதய ஆண்டவர் ஆலயம், துத்திப்பட்டு
🌹3. தூய ஜெயராக்கினி அன்னை ஆலயம், ஓதியம்பட்டு.

💐பங்குத்தந்தை : அருட்பணி S. பிச்சைமுத்து
💐உதவி பங்குத்தந்தை : அருட்பணி ஜான்பால்

👉திருத்தல தொடர்பு எண் : 0413 2666363

👉Website : www.villianurshrine.com

🌲குடும்பங்கள் : 350+
🌲அன்பியங்கள் : 10

🔥ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணி, காலை 07.30 மணி மாலை 05.30 மணி

🔥வார நாட்களில் திருப்பலி : காலை 06.00 மணிக்கு

🔥சனிக்கிழமை திருப்பலி : காலை 06.00 மணி, காலை 11.30 மணி, மாலை 06.00 மணி.

🔥மாதத்தின் முதல் சனிக்கிழமை : காலை 05.30 மணி திருப்பலி, காலை 06.30 மணிக்கு சிறிய தேர்பவனி.
காலை 06.45 மணி, 11.30 மணி, மாலை 05.30 மணிக்கும் திருப்பலி. இரவு 07.30 மணிக்கு பெரிய தேர்பவனி, இரவு 09.00 மணிக்கு நற்கருணை ஆசீர், அன்பு விருந்து.

🔥மூன்றாவது சனிக்கிழமை : காலை 06.00 மணிக்கு திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு, நற்கருணை ஆசீர்.

🔥ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை ஆயிரம் மணி செபமாலை செபிக்கும் பக்தி முயற்சியானது அருள்நிறை ஆலயத்தில் காலை 09.00 மணி முதல் நண்பகல் 02.00 மணிவரை நடைபெறும். பின்னர் இறை மக்களுக்கு உணவு வழங்கப்படும்.


🙏மண்ணின் மைந்தர்கள் :
💐1. அருட்பணி அருள் தம்பு டோமினிக்
💐2. அருட்பணி சாந்து சிரில்
💐3. அருட்பணி ஜான் சகாய ரவி SJ
💐4. அருட்பணி பிரவின் குமார்.

💐1. அருட்சகோதரி மத்தியாஸ் மேரி FSGA
💐2. அருட்சகோதரி ஞானமரியாயி

🎉திருவிழா : ஈஸ்டர் பெருவிழாவைத் தொடர்ந்து வருகிற சனிக்கிழமை ஆரம்பித்து ஒன்பது (நவ) நாட்கள்.

👉வழித்தடம் : புதுவை - வில்லியனூர்
முருங்கம்பாக்கம் - வில்லியனூர்
விழுப்புரம் - வில்லியனூர்.

திருத்தல வரலாறு :
*********************
🌳பல்வேறு பழ மரங்களும், தோப்புகளும் நிறைந்ததும், பரந்த நெல் வயல்களும், அவற்றின் பாசனத்திற்கு பயன்படும் பல ஏரிகளும் சூழ்ந்த ஊராக 18 ம் நூற்றாண்டில் அழகுடன் விளங்கியது வில்லியனூர். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களும் இங்குள்ளன. மேலும் இராட்சத சக்கரங்களைக் கொண்ட தேர்களும், மடங்களும் கொண்ட பழம் பெருமை வாய்ந்த ஊர்.

🍇ஆகவே பாரிஸ் அந்நிய வேத போதக குருக்களை இவ்வூர் மிகவும் கவர்ந்தது. புதுச்சேரி மிஷனின் முதல் ஆயர் மேதகு பிரிகோ அவர்கள் 1778 ஆம் ஆண்டு உழவர்கரை யில் சுதேசி குருக்களுக்கான முதல் குருமடத்தை நிறுவினார். இது 1792 ஆம் ஆண்டு பேராலயத்திற்கு அருகாமையில் கொண்டு வரப்பட்டது. அப்போதைய ஆயர் மேதகு ஷாம் பெனுவா அவர்கள், இந்த குருமடத்தை வில்லியனூரில் அமைக்க விரும்பினார். அதற்கான நிலமும் தேடப் பட்டது. ஆனால் அப்போதைய சூழ்நிலையில் நிலத்தை வாங்க இயலவில்லை.

🌷எனினும் வில்லியனூரில் வாழ்ந்த சிறு அளவிலான கிறிஸ்தவ சமூகத்தினர் இங்கு ஒரு சிற்றாலயத்தை எழுப்ப திட்டமிட்டு, இதற்கான இடத்தைத் தேடினர். சில காரணங்களால் இத் திட்டம் நிறைவேற்றப் படாமல் நீண்டு கொண்டே போனது..!

🏵ஆலயம் கட்ட முதல் பொருளுதவி:
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லெப்பின் அவர்கள் புதுவையில் மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது மகள் கடும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்ட வேளையில், மருத்துவர்களால் அவளை குணப்படுத்த இயலவில்லை. மனம் நொந்து கலங்கிய டாக்டர் லெப்பீன் தம்பதியினர் மாதாவிடம் கண்ணீருடன் உருக்கமாக ஜெபித்தனர்..!
அன்னையின் அருளால் நோய்வாய்ப்பட்ட மருத்துவரின் மகள் அற்புத சுகமடைந்தார். ஆகவே நன்றியறிதலாக புதுவை மிஷன் குருவிடம் ஆயிரம் பிராங்குகளை (பிரெஞ்சு நாட்டு பணத்திற்கு பிராங்க் என்று பெயர்) கொடுத்தார். இதுவே வில்லியனூர் ஆலயம் கட்ட முதல் காணிக்கையாக அமைந்தது.

🏵ஆலயம் கட்டப்பட்டது :
வில்லியனூரில் ஆலயம் கட்டாமல் அதன் எல்லைக்கு அப்பாற்பட்ட கணுவாபேட்டை யில் ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக நிலம் வாங்கப்பட்டு அருட்தந்தை பியர் குய்யோன் அடிகளாரின் பெயரில் பதிவு செய்யப்பட்டது.

🍇பதிவு செய்யப்பட்ட நிலத்தில் ஆலயம் எழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பொருளாதார சிக்கல் ஏற்படவே புதுவை, கும்பகோணம் பகுதிகளைச் சார்ந்த கிறிஸ்தவ மக்களின் நிதியுதவியுடன் 1877 ஆம் ஆண்டு ஆலயம் கட்டப்பட்டது. இவ்வாலயம் அமைய மூலகாரணமாக இருந்தவர்கள் பாரிஸ் அந்நிய வேத போதக சபை குருவான அருட்பணி தார்பெஸ் அடிகளார் ஆவார். இவர் லூர்து நகரில் மரியன்னையின் காட்சியைப் பெற்ற புனித பெர்னதெத் ற்கு உறவினர் ஆவார்.

💐புதுமையான லூர்து மாதா சுரூபம் :
புதுவையைச் சார்ந்த ஒரு புண்ணியவதி நிதியுதவி செய்திட, அருட்தந்தை தார்பெஸ் அவர்கள் தமது உறவினரான புனித பெர்னதெத் ன் உதவியை நாட, அவர் லூர்து நகர் கெபியில் நிர்மாணிக்கப்பட்ட மாதா சுரூபத்தை செய்த சிற்பியைக் கொண்டு புதிய சுரூபம் செய்து புதுவைக்கு கப்பலில் அனுப்பி வைத்தார்.

🌺ஒரு ஆண்டு கடல் பயணம் செய்து மாதா சுரூபமானது புதுவை வந்தது. இந்த சுரூபத்தைக் கொண்டு வரும் வேளையில் தரையில் இரண்டு இடங்களில் அதனை வைத்திருந்த பெட்டியுடன் விழுந்தது. மூன்றாவதாக புதுவை மிஷன் வாசற்படியருகே மீண்டும் விழவே..! அனைவரும் 6 அடி உயரம் கொண்ட சுரூபம் சுக்கு நூறாக உடைந்து போயிருக்கும்..! என்ற கலக்கத்துடன் பெட்டியைத் திறந்தால்..! என்னே ஆச்சரியம்..! மிக அழகான அன்னையின் சுரூபத்திற்கு எவ்வித பாதிப்புமின்றி பொலிவுடன் இருப்பதைக் கண்டு அனைவரும் வியப்புற்றனர்.

🙏தேவ அன்னையின் இச்சுரூபம் சாதாரணமானதல்ல..! புதுமைகள் நிறைந்த சுரூபம் எனப் போற்றினர். அன்னையின் பெருமை எங்கும் பரவவே பக்திப் பெருக்குடன் எல்லா மதத்தினரும் வந்து வணங்கி வேண்டி நின்றனர்.

🌺வில்லியனூருக்குப் பயணம் :
மூன்று நாட்கள் புதுவை பெரிய கோவிலில் (தூய ஜென்மராக்கினி மாதா கதீட்ரல்) வைக்கப்பட்ட சுரூபமானது, வில்லியனூருக்கு மிக ஆடம்பரமாக 25 உயரத் தேரில் இராணுவ இசைக் கருவிகள் முழங்க, மேள தாளங்கள், தோரணங்கள், கொடிகள் வரவேற்க ஆயிரக்கணக்கான மக்களுடன் வந்து கொண்டே இருந்தது. பல சமய மக்களும் அவர்களுடைய ஊரில் தேர் வரும் போது சிறப்பான வரவேற்பு கொடுக்க எங்கும் அன்னையின் அருள் பரவியது.

🌸வில்லியனூர் செல்ல பெரிய சாலை ஒன்று உண்டு. ஆனால் இப்பகுதியில் கடைசி நேரத்தில் ஓர் கலகம் ஏற்படவே, இப்பகுதி வழியே வரவேண்டிய நிலையில், தேரில் இருந்த லூர்து அன்னையின் சுரூபம் தானாகவே திரும்பி வேறு வழியைக் காட்டியது. இவ்வழியானது மக்கள் அதிகம் நடமாட்டமில்லாத குறுக்கு வழி ஆகும். இவ்வாறாக நள்ளிரவு 12.00 மணிக்கு சுரூபம் வில்லியனூர் வந்தடைந்தது. அருட்தந்தை குய்யோன் தாவீதுநாதர் அவர்கள் ஆலய நடுப்பீடத்தில் அன்னையின் சுரூபத்தை வைத்து அர்ச்சித்தார்.

🌸அன்று விடியற்காலை 02.00 மணி முதல் காலை 07.00 மணி வரை திருப்பலிகள் தொடர்ந்து நடந்த வண்ணமாக இருந்தது. 08-04-1877 அன்று காலை 07.00 மணிக்கு பேராயர் மேதகு லவுணான் ஆண்டகை புதிய ஆலயத்தை அர்ச்சித்தார். அன்றிலிருந்து வில்லியனூர் புகழ் பெற்ற ஒரு திருத்தலமாக மாறியது.

👉திருயாத்திரை :
ஈஸ்டர் பெருவிழாவை அடுத்து வரும் சனிக்கிழமை கொடியேற்றப்பட்டு, நவநாள் முடித்து விழா எடுப்பது என பேராயர் லவுணான் ஆண்டகையால் முடிவு செய்யப்பட்டது. புதுவையிலிருந்து ஏராளமான மக்கள் தினமும் இந்த நவநாட்களில் பங்கு கொள்வது வழக்கமானது.

🌹சாத்திப்பட்டு, பணிக்கன்குப்பம், கடலூர், விழுப்புரம், செங்காடு போன்ற ஊர்களில் இருந்து இறை மக்கள் மாட்டு வண்டிகளில், கொடியேறும் அன்றே தங்கள் குடும்பங்களுடன் வந்து விடுவர். திருவிழா நிறைவடையும் வரை ஆலய வளாகத்தில் தங்கி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து திருப்பலியில் பங்கு கொண்டு இறையாசீர் பெற்றுச் செல்வர். பிற இடங்களில் இருந்தும் பல மிஷனரிகளும், குருக்களும் திருத்தலத்தில் தங்கி மக்களின் ஆன்மீகத் தேவைகளை கவனிப்பார்கள்.

🌹மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல மாநில மக்களும் திருவிழாவிற்கு வருகை தருவார்கள்.

💐மாதா குளம் :
லூர்து மாதா காட்சியளித்த போது நீரூற்றை உருவாக்கியதன் அடையாளமாக ஆலயம் கட்டும் போதே, மண் கரையாலான குளம் அமைக்கப்பட்டது. 1922 ம் ஆண்டு அருட்பணி லெஸ்போன் அவர்கள் ஆலயத்தை பழுது பார்த்த பின்னர், 1923 ல் குளத்தை சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. 1924 ஜனவரியில் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்று, குளத்தின் நடுவில் பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சுரூபம் நிறுவப் பட்டது. தற்போது குளத்தை சுற்றிலும் சிலுவைப்பாதை நிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

🏵புனித நீர் கலக்கும் திருவிழா :

🌺இவ்விழா மாதா குளத்து விழா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் சனிக்கிழமை நடைபெறும். அன்று மாலை வில்லியனூரில் ஏதேனும் ஆயர் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படும். அங்கு பீடத்தின் முன்பு பிரான்சு லூர்து நகரில் உள்ள மாதா கெபியில் உள்ள நீரூற்றுலிருந்து கொண்டுவரப்படும் புனித நீர் வைக்கப்படும்.
திருப்பலிக்குப்பின் ஆலயத்திலிருந்து பவனியாக நீர் கொண்டு செல்லப்பட்டு குளத்தின் நான்கு கரைகளிலும் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், பிரெஞ்ச் ஆகிய நான்கு மொழிகளில் மாசில்லா கன்னியே கீதம் முழங்க நீர் ஊற்றப்படும்.

🙏அன்னையின் புதுமைகள் :
பிற சமயத்தை சார்ந்த சாமி என்பவர் அயல்நாட்டில் வேலை நிமித்தமாக கடலில் படகிலேறி பயணம் செய்த போது, படகு உடைந்து, அவருடன் பயணம் செய்த அனைவரும் தண்ணீரில் மூழ்க, சாமி தண்ணீரில் தத்தளித்தபடி வில்லியனூர் அன்னையிடம் தம்மை காப்பாற்றும்படி மனமுருக வேண்டினார். ஆச்சரியம்..! நீரோட்டமானது அவர் இறங்க வேண்டிய கரையோரம் கொண்டு போய் சேர்த்தது. நன்றியுடன் சாமியும் குடும்பத்தினரும் அன்னையின் அற்புதத்தைக் கண்டு திருமுழுக்கு பெற்று கிறிஸ்துவில் இணைந்தனர்.

🌳1905 ம் ஆண்டு நாவல் மரத்திலிருந்து விழுந்து, வாயில் நுரை தள்ள அசைவற்று கிடந்த 10 வயது சிறுவன் பல்வேறு சிகிச்சைகள் கொடுத்தும் குணப்படுத்த முடியாமல் கையும் காலும் செயலற்று போன நிலையில், அவனை லூர்து அன்னையிடம் கொண்டு வந்து அவனது தாய் முழந்தாளிட்டு கண்ணீருடன் ஜெபிக்க, அன்னையின் அருளால் சிறுவன் மூன்று நாட்களில் பூரண சுகமடைந்தான்.

🌹1928 ல் கண்ணில் பூப்பட்டு பார்வை குறைவடைந்தவர் அன்னையிடம் வேண்டி, முழு பார்வையும் பெற்றார்.

🌸தீராத நோயினால் அவதிப்பட்ட அருட்தத்தையவர்கள் அன்னையின் அற்புதத்தால் குணமடைய, இதனை திருத்தலத்தில் சாட்சியாக மக்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

🏵1928 ம் ஆண்டில் மனநலம் குன்றிய பெண் அன்னையின் அருளால் நலன் பெற்றார்.

🍎இவ்வாறு எண்ணற்ற அற்புதங்கள் நாள்தோறும் அன்னையின் திருத்தலத்தில் நடந்து வருகிறது.

🔥ஒவ்வொரு மூன்றாம் சனிக்கிழமையும் அன்னையின் அற்புத குளத்தைச் சுற்றி நோயாளிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நிற்க, குணமளிக்கும் இயேசுவிடம் அருட்பணியாளர் செபித்துக் கொண்டிருக்கும் போது, மற்றொரு அருட்பணியாளர் ஒவ்வொரு நோயாளியையும் கதிர்பேழையை வைத்து ஆசீர்வதிக்கிறார். இந்த குணமளிக்கும் வழிபாட்டில் பிற சமய மக்களும் திரளாக கலந்து கொள்வார்கள்.

👉பாதயாத்திரை :

🌷1977 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாபெரும் சூறாவளி புதுவையை தாக்க இருக்கிறது என எச்சரிக்கை கொடுக்கப்பட, புதுவையின் மக்கள் அனைவரும் கலங்கினர். அப்போதைய பேராயர் மேதகு வெண்மணி செல்வநாதர் அவர்கள் புதுவை நகர மக்களைக் காக்க மாதாவிடம் ஜெபிக்க ஓர் அழைப்பை கொடுத்தார். புதுவை சூறாவளியிலிருந்து காப்பாற்றப் பட்டுவிட்டால் புதுவை நகர மக்கள் வில்லியனூருக்கு பாதயாத்திரையாக சென்று நன்றி கூறுவோம் என்று வாக்கு கொடுத்தார். மக்கள் உருக்கமாக செபிக்க புயல் கரையைக் கடக்காமல் கடந்து சென்றது. 10-10-1977 அன்று பேராயர் தலைமையில் புதுவை நகரில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் வில்லியனூருக்கு வந்து அன்னைக்கு நன்றி செலுத்தினர்.

🌺இந்த பாதயாத்திரை அடுத்த ஆண்டிலிருந்து பரிகார யாத்திரையாக இன்றளவும் நடந்து வருகிறது.

🌺புனித பெர்னதெத் இறந்து 16-04-1979 அன்று நூறு ஆண்டுகள் நிறைவடைகின்றது. அதன் நினைவாக திருத்தலத்தில் பெரிய பாடுபட்ட சுரூபம் வைக்கப்பட்டது. மேலும் புனித பெர்னதெத் புத்தகாலயம் திறக்கப்பட்டது.

🌳ஆலய கொடிமரமும் இறையியல் விளக்கமும் :

🌲புதிய கொடிமரமானது 20-04-2014 அன்று வைக்கப்பட்டது.

🌳மண்ணிலே ஆழ கால் ஊன்றி, விண்ணை நோக்கி விருட்சமென உயர்ந்து நிற்கும் கொடிமரம் கடவுளை குறிக்கிறது. கொடியானது மனிதனின் ஆன்மாவைக் குறிக்கிறது. கொடி கயிறானது இறை அருளையும் உறவையும் குறிக்கிறது.

🌺கொடியானது அழகுற அலங்கரிக்கப்பட்டு இருந்தாலும் தானாக மேலே ஏறி பறக்க முடியாது. கொடி கயிறிலே இணைக்கப்பட்டு கொடி மரத்திலே கட்டப்பட்டால் தான் உயரத்திலே பறக்க முடியும்.

🌺அதுபோல கொடி என்ற மனிதனின் ஆன்மாவானது, கொடி கயிறு என்ற இறை உறவால் கட்டப்பட்டு, கொடிமரம் என்ற கடவுளோடு இணைக்கப்பட்டால் தான் நமது வாழ்க்கை உயரே எழும்பி பறக்க முடியும்.

🌹இவ்வாறு அன்னையின் அருளால் புகழ்பெற்று விளங்கிய திருத்தலத்திற்கு பல பகுதிகளில் இருந்தும் இறைமக்கள் நாள்தோறும் வந்து கொண்டேயிருக்க, திருத்தலத்தில் இடநெருக்கடி ஏற்பட்டது. ஆகவே இறைமக்கள் அனைவரும் திருத்தலத்தின் உள்ளே அமர்ந்து ஜெபிக்கும் வண்ணமாக கட்டப்பட்ட புதிய ஆலயம் 11-2-2017 அன்று அருட்பணி ரிச்சர்ட் பணிக்காலத்தில், மேதகு அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் மற்றும் ஆறு மேதகு ஆயர்கள் முன்னிலையில் அர்ச்சிக்கப் பட்டது.

🌷பங்குப் பேரவை :
🌷மரியாயின் சேனை :
🌷இளையோர் இயக்கம் :
🌷புனித வின்சென்ட் தே பவுல் சபை :
🌷புனித பெர்னதெத் கிளைச் சபை :
🌷பீடச் சிறுவர்கள் இயக்கம் :
என பல்வேறு அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

👉பங்கில் உள்ள துறவற சபைகள் :
🌹1. இமாகுலேட் சபை.
🌹2. மரியன்னையின் தூய இதய பிரான்சிஸ்கன் சகோதரிகள் சபை.
🌹3. இந்தோச்சா - அரியூர்
🌹4. தீப ஒளி இல்லம் - தொண்டமாநத்தம்
🌹5. புனித லூயிஸ் கொன்சாகோ இல்லம்.
🌹6. சாந்தா கிளாரா இல்லம்.
🌹7. திருக்குடும்ப சபை.

📚கல்வி நிறுவனங்கள் :
🖋1. இமாகுலேட் அரசு உதவி பெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி.
🖋2. இந்தோச்சா மேல்நிலைப்பள்ளி, அரியூர்.
🖋3. புனித லூர்து அன்னை ஆண்கள் உயர்நிலைப் பள்ளி.
🖋4. இமாகுலேட் தீப ஒளி பள்ளி, தொண்டமாநத்தம்.

🏵விடுதிகள் :

🌺தூய மரியன்னை ஆண்கள் உள்விடுதி

🌺தூய இதய மரியன்னை பெண்கள் உள்விடுதி.

🌺திருத்தலத்தின் சார்பில் மனநல குன்றியவர்கள் காப்பகம் ஒன்று ஊசுட்டேரியில் செயல்படுகிறது.

👉வில்லியனூர் திருத்தலம் உலகிலேயே லூர்து அன்னைக்கு இரண்டாவதாக கட்டப்பட்ட ஆலயம் என்பது குறிப்பிடத் தக்கது.

🙏இத்தகைய சிறப்பு வாய்ந்த புதுமைகள் நிறைந்த, பழமை வாய்ந்த வேண்டும் வரம் தருகிற வில்லியனூர் மாதா திருத்தலத்தை மகிழ்ச்சியான கிறிஸ்து பிறப்பு நாளில் பதிவு செய்ய அருள் புரிந்த இறைவனுக்கு நன்றி..!


இயேசுவுக்கே புகழ்..! இயேசுவுக்கே நன்றி..! மரியே வாழ்க..! 🏵💐🙏💐🏵


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot