Holy Cross Shrine Manapad's Official Website

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday 14 March 2019

இயேசு சுமந்து சென்ற உண்மையான சிலுவை மரம் மணப்பாட்டிற்கு வந்த வரலாறு

மன்னார் வளைகுடாவைத் தழுவி நிற்கும் மணப்பாட்டில், சிந்து தேச அப்போஸ்தலரான புனித பிரான்சிஸ் சவேரியாரின் வசிப்பிடமாக விளங்கிய 'கார்மணல் துறையின் கல்வாரி மலை' என வர்ணிக்கப்படும் சிறு மலையில் நிறுவப்பட்டுள்ளஆலயத்தில், பக்தியுடன் வணங்கப்பட்டு வரும் திருச்சிலுவையில் நமது இரட்சகர் தமது இரட்சணியப் பலியின்போது சுமந்து சென்ற உண்மையான சிலுவை மரத்தின் சிறு பகுதி இணைக்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்த உண்மை.

ஆயினும் நமது இரட்சகர் திருப்பாடுகளை அனுபவித்த சிலுவை மரத்தின் ஒரு பகுதி மணவை நகருக்கு எப்படி வந்தது? அதன் வரலாறு என்ன? என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா? அதனை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்..

கிறிஸ்து நாதரின் மரணத்திற்குப் பின், அவர் அறையப்பட்ட சிலுவை மரத்தைப் பற்றி, இரு நூற்றாண்டுகளாக, பகிரங்கமாக எவ்வித தகவலும் தெரியாமல் இருந்தது. சக்கரவர்த்தி காண்ஸ்டன்டைனின் அன்னையான ஹெலனா சீமாட்டி, திருச்சிலுவை பற்றி ஆராய்ந்து அறிய முயற்சித்தாள். தனது மகன் போர்க்களத்தில் வெற்றி வாகை சூடவும், கிறிஸ்தவ மறையைத் தழுவவும் காரணமாக இருந்த திருச்சிலுவைக்கு, தான் செய்யும் மரியாதையாக எண்ணியே இப்பணியைத் தொடங்கினாள். அத்துடன், இயேசு கிறிஸ்து சம்பந்தப்பட்ட புனித பொருட்கள் அனைத்தையும் ஒன்று திரட்டவும் அவள் விரும்பினாள். தனது எண்ணத்தை அவளது மைந்தனும் சக்கரவர்த்தியுமான கான்ஸ்டண்டைனிடம் தெரிவித்தாள். அவரும் தமது அன்னையின் முயற்சிக்கு உறுதுணையாக ஆராய்ச்சி அறிஞர்களை நியமித்ததுடன் அதற்கு தேவையான பெரும் பொருளையும் கொடுத்து உதவினார்.

கி.பி 326 ல் ஹெலனா சீமாட்டி ஜெருசலேமுக்கு வந்து சேர்ந்தாள். அப்போது அவளுக்கு வயது எண்பது. வேதாகம நிபுணர்களுடன் அவள் நடத்திய ஆராய்ச்சிகள் போதிய அளவு பலன் அளிக்கவில்லை. பின்னர் தலைமுறை தலைமுறையாக காக்கப்பட்டு வந்த சில இரகசிய தகவல்களின்படி ஜெருசலேமை பகைவர்கள் தாக்கியபோது கிறிஸ்துபெருமானாரின் பக்தர்கள் சிலுவை உட்பட பல புனித பொருட்களை மிக ஆழமாகத் தோண்டி, பத்திரமாக புதைத்து வைத்ததாக அறிந்தனர். இப்புதிய தகவல் ஆராய்ச்சியாளர்களுக்கு உற்சாகம் அளிக்கவே, அவர்கள் மீண்டும் முயன்று, இறுதியில் அந்தப் புதைகுழியை கல்வாரி மேட்டுக்கு அருகில் கண்டு உவகை எய்தினர்.

அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களில், ஆறு சிலுவைத் துண்டுகள், கிறிஸ்துவுக்கு யூதர்கள் அணிவித்த முள் முடி, சிலுவையில் அறைவித்த ஆணிகள் ஆகிய வரலாற்றுச் சிறப்புடைய பயனுள்ள பொருட்கள் கிடைத்தன.

ஆறு சிலுவைத் துண்டுகளும், மூன்று சிலுவைகளுக்கு உரிய குறுக்கு நெடுக்கு பாகங்கள் ஆகும். இயேசு கிறிஸ்து, இரு கள்வர்களுக்கு நடுவே அறையப்பட்டார் என்பதும், அதற்கு மூன்று சிலுவைகள் தேவைப்பட்டன என்பதும் தெரிந்ததே. இம்மூன்று சிலுவைகளில், தேவகுமாரனாகிய கிறிஸ்துநாதர் சுமந்து சென்ற திருச்சிலுவை எது என்று அறிவதில் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் பிரச்சினை உருவாகிற்று!

அத்தருணம் ஜெருசலேமில் மேற்றிராணியாராகஇருந்த மக்காரிற் அடிகளார், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு, இறைவனின் அருள்வழியை நாட எண்ணினார். தேவாலயத்தில் நடைபெற்ற பல ஆராதனைகளைத் தொடர்ந்து, கடும் நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு பெண்ணின் மீது அந்த சிலுவைத் துண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வைக்கப்பட்டன. ஒரு சிலுவைத் துண்டை அவள்மீது வைத்த போது அவள் ஆச்சரியப்படத்தக்க விதமாக பூரண சுகமுற்று எழுந்தாள்! ஆகவே, இயேசு கிறிஸ்துநாதர் உயிர் நீத்த திருச்சிலுவை அதுதான் என அங்கு கூடியிருந்த அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். அத்திருச்சிலுவையும் ஹெலனா சீமாட்டியிடம் கைளிக்கப்பட்டது.

தனது நாட்டிற்கு புறப்படுவதற்கு முன்னர், ஹெலனா சீமாட்டி திருச்சிலுவையை மூன்று பாகங்களாப் பிரித்தாள். ஜெருசலேம் நகர மேற்றிராணியாரானமக்காரிற் அடிகளார் தனது ஆராய்ச்சிகளுக்கு அளித்த ஆதரவுகளுக்கு உபகாரமாக, மூன்று பகுதியில் ஒரு பகுதியை அவரிடம் கையளித்தாள், மற்ற இரு பகுதிகளும் காண்ஸ்டாண்டி நோபிளுக்கு கொண்டு செல்லப்பட்டன. அவ்விரு பகுதிகளில் ஒரு பகுதி சக்கரவர்த்தி காண்ஸ்டன்டைனிடம் கொடுக்கப்பட்டது. மற்றப் பகுதி, திருச்சபைத் தலைவரான பாப்பரசருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆயர் மக்காரிற் அடிகளார், தாம் பெற்ற சிலுவைத் துண்டை விலைமதிப்பரிய திரவியமாக பேணி, அழகிய ஆலயம் ஒன்றை அமைத்து அங்கே நிறுவினார். கி.பி. 614ல் பெர்சியர்களின் படையெழுச்சியின் போது, இப்புனித பொருளும் கவர்ந்து செல்லப்பட்டது.. 718 ல் கெராக்ளியஸ் மன்னன் பெர்சியாவின் மீது படையெடுத்தான். தோல்வி அடைந்த பெர்சிய மன்னன், திருப்பண்டத்தைக் கொடுத்து சமரசம் செய்து கொண்டான். கிறிஸ்தவ உலகு அக்களிப்படைந்தது.

ஜெருசலேமில் இருந்து திருச்சிலுவை பவனியாக காண்ஸ்டான்டி நோபிளுக்கு கொண்டு செல்லப்பட்டது. சக்கரவர்த்தி கான்ஸ்டன்டைன், சிரசில் முடி தரித்து, காலில் பாதரட்சைகள் அணியாது, தானே தன் தோள் மீது திருச்சிலுவையை பயபக்தியுடன் சுமந்து சென்றான். இப்பெரும் வைபவம் சத்தியத் திருச்சபையால் செப்டம்பர் மாதம் 14ம் தேதி நினைவு கூறப்படுகிறது. (மணப்பாடு மாநகர் திருத்தலத்திலும், திருச்சிலுவை மகிமை விழா இதே தினத்தில் தான் கொண்டாடப்படுகிறது.)

காண்ஸ்டான்டி நோபிளுக்குக் கொண்டு செல்லப்பட்ட சிலுவைத்துண்டிலிருந்து பத்தொன்பது துண்டங்களை வெட்டி எடுத்துக்கொண்டு, மிகுதியை ஜெருசலேமுக்கு அனுப்பி வைத்தனர். கி.பி 627ம் ஆண்டு, ஜெருசலேம் மீண்டும் எதிரிகளால் தாக்கப்பட்டது. அத்தருணம் சாரசென் இனத்தாரால் அழிவுகளுக்கு உள்ளாகிய ஜெருசலேமில், மேற்கூறிய சிலுவைத்துண்டத்திற்கு என்ன நேர்ந்தது என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது! வெட்டி எடுக்கப்பட்ட சிறு துண்டுகளும் உலகின் பல பாகங்களுக்கும் கொடுத்து உதவப்பட்டன.

சக்கரவர்த்தி கான்ஸ்டன்டைன், தனக்கு கொடுக்கப்பட்ட சிலுவைத் துண்டில் ஒரு பகுதியை வெட்டி எடுத்து, தமது மார்பு பக்கத்தில் பொருத்தி, எப்போதுமே அணிந்திருந்தாராம். அவரது மரணத்திற்குப் பின்னர், அப்பதக்கம் பதினாறாம் கிரகோரிக்கு கையளிக்கப்பட்டு, தற்போது உரோமாபுரியில் உள்ள புனித இராயப்பர் தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சக்கரவர்த்தி கான்ஸ்டன்டைனுக்குக் கிடைத்த சிலுவைத்துண்டின் மற்றொரு சிறு பகுதியை, அவரது மரணத்திற்கு பிறகு காண்ஸ்டான்டி நோபிளை ஆண்ட இரண்டாவது ஜஸ்டின் சக்கரவர்த்தி வெட்டி எடுத்து, பிரான்ஸ் நாட்டு அரசி ரடகுண்டாவுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அந்த திருச்சிலுவைத்துண்டு, வெகு ஆடம்பரமாக பிரான்ஸ் நாட்டில் வரவேற்கப்பட்டது. (அந்த வைபத்துக்கென, புனிதரான வெனான்சியுஸ் இயற்றிய 'வெக்சிலா ரெஜிஸ்' என்ற பாடல், தற்போது பெரிய வெள்ளிக்கிழமைகளில் திருச்சிலுவை ஆராதனையின் போது பாடப்படுகிறது.)

காண்ஸ்டான்டி நோபிளின் அரசன் இரண்டாவது பால்டுவின் பணமுடையால் துன்புற்றான். எனவே, தனது அரண்மனையில் இருந்த விலைமதிப்பற்ற பொக்கிஷமான திருச்சிலுவைத் துண்டில் மிகுதி இருந்த பெரும் பகுதியையும், கிறிஸ்து நாதருக்கு யூதர்களால் சூட்டப்பட்ட முள்முடியையும் கோடிசுவரர் ஒருவரிடம் ஈடு வைத்து, தனக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொண்டான். இச்செயல், கிறிஸ்தவ உலகின் கண்டனதுக்கு உள்ளானது.

இதனால் மனம் வெதும்பிய பக்திமானும், பிரான்ஸ் தேசத்து மன்னருமான புனித லூயிஸ், சில துறவிகளை அனுப்பி, அந்தக் கோடிசுவரரிடமிருந்து புனித பொருள்களை மீட்டு, அவற்றுக்கு நேர்ந்த அவசங்கைைப் போக்கினார். இன்று, அப்புனித பொருள்கள், பாரீஸ் நகரில் பேர்பெற்று விளங்கும் நேட்டரிடாம் தேவாலயத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

ஹெலனா சீமாட்டியினால் உரோமாபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கிடைத்ததற்கரிய புனித பொருளான திருச்சிலுவைத் துண்டை பாதுகாப்பதற்கென, உரோமாபுரி மக்கள் "திருச்சிலுவை" என்ற பொருள்பட 'சாந்தகுரூஸ்' என்ற தேவாலத்தைக் கட்டி எழுப்பினார். பெரிய வெள்ளிக்கிழமைகளில் பரிசுத்த பாப்பரசர் இங்கு வருகை தந்து அன்றைய பிராத்தனைகளுக்கு தலைமை தாங்குகிறார். சாந்தாகுரூஸ் தேவாலயத்தில் உள்ள திருச்சிலுவைத் துண்டிலிருந்து காலத்துக்கு காலம் வெட்டி எடுக்கப்பட்ட சிறு பகுதிகள், உலகின் பல பாகங்களிலும் உள்ள முக்கிய தேவாலயங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

1583-ம் ஆண்டு, பெப்ருவரி மாதம் உரோமாபுரியில் இருந்து இயேசு சபையின் ஐந்தாவது தலைவரான அருட்திரு கிளாடியுஸ் ஆக்குவாவீவா சுவாமிகள், மணப்பாட்டில் அப்போது பணிபுரிந்த அருட்திரு ஜான் சலேனோவா சுவாமிகளின் விண்ணப்பதிற்கு அமைய, சாந்தாகுரூஸ் தேவாலயத்தில் உள்ள மெய்யான திருச்சிலுவையின் இரு துண்டுகளை ஒரு சிலுவை வடிவில் இணைத்து, மணவை நகர் மலை மீது நிறுவும்படி அனுப்பி வைத்தார்.

புனித சவேரியாரின் காலத்திலேயே, மணப்பாட்டு மலையில் திருச்சிலுவை ஆசிரமம் (aedicula) ஒன்று அமைந்திருந்தது என்பது பரம்பரை வரலாறு கூறும் செய்தி. உரோமாபுரியில் இருந்து வந்த திருப்பண்டத்தைப் பெற்றுக்கொண்ட அருட்திரு சலேனோவா சுவாமிகள், மலைமேல் ஏற்கனவே இருந்த திருச்சிலுவை ஆசிரமத்தை மணவை நகர் மக்களின் தாராள உதவிகளைக் கொண்டு சீர்திருத்தி சிற்றாலயமாக்கி திருச்சிலுவைப் பண்டத்தை அதில் ஆடம்பரமாக நிறுவினார். அன்று தொடக்கம், இவ்வாலயம் தென்னகம் முழுமைக்கும் சிறந்த திருயாத்திரைத்தலமாக விளங்கிவருகிறது.

கி.பி 1725ம் ஆண்டு, ஜனவரி 5ம் நாள் பாப்பரசர் 13ம் ஆசிர்வாதப்பர் இவ்வாலயத்திற்கு பல ஞானப்பலன்களை வழங்கி, யேசுவின் ஐந்து திருக்காய சபையை அதிகாரபூர்வமாக இங்கு நிறுவினார்.

கல்வாரி மலைக்கு அருகில் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட திருச்சிலுவையின் ஒருபகுதி, ஹெலனா சீமாட்டியால் ஜெருசலேமில் இருந்து காண்ஸ்டான்டி நோபிளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொழுது, அதனை சக்கரவர்த்தி கான்ஸ்டன்டைன் பக்தி சிரத்தையுடன் வெற்றி பவனியாக தனது தோள்மீது சுமந்து சென்ற பெரும் வைபவத்தை நினைவு கூறும் தினமாகிய செப்டம்பர் மாதம் 14ம் தேதி, ஆண்டுதோறும் மணவை நகர் மலையில் அமைந்திருக்கும் ஆலயத்தில் திருச்சிலுவை மகிமை பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தருணம், தென்னகத்தின் பல பாகங்களில் இருந்து மணவை நகர் வந்து குழுமும் பக்தகோடிகள், பரிபூரண ஞானப்பலன்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

" திருச்சிலுவையே எங்கள் ஏக நம்பிக்கையே வாழ்க! "

திருச்சிலுவை திருத்தலம் மணப்பாடு.

1 comment:

Post Top Ad

Your Ad Spot